உடுமலை
உடுமலையில் ஒரே ஒரு மாணவர் படிக்கும்பள்ளி உள்பட உடுமலை பகுதியில் உள்ள பள்ளிகளில், பள்ளி கல்வித்துறை இயக்குனரும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி கூடுதல் திட்ட இயக்குனருமான வி.சி.ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பள்ளிகளில் ஆய்வு
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, பள்ளி கல்வித்துறையின் சார்பில் மண்டல வாரியாக, இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் தலைமையில் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கோவை மண்டலத்தில் திருப்பூர் உடுமலை கல்வி மாவட்டத்தின் பள்ளி கல்வித்துறை இயக்குனரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை கூடுதல் திட்ட இயக்குனருமான (நிலை-1) வி.சி.ராமேஸ்வர முருகன் தலைமையில் உடுமலை மாவட்ட கல்வி அலுவலர் கு.பழனிசாமி, பள்ளி துணை ஆய்வாளர்கள் சு.கலைமணி, ரவி, ஆசிரியர்கள் ஜெயக்குமார், கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று உடுமலை கல்வி மாவட்டத்தின் பள்ளிகளில் ஆய்வு செய்தனர்.
இதற்காக உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, துங்காவி அரசு உயர்நிலைப்பள்ளி, துங்காவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, உடுமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பழனிப்பாதை நகராட்சி தொடக்கப்பள்ளி, பழனி ஆண்டவர் நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பள்ளி வளாகத்தூய்மை, மாணவர்களின் கற்றல்திறன், பாடபுத்தகங்கள், ஆசிரியர்களின் பாட குறிப்பேடு, பள்ளி பதிவேடுகள், பேரிடர் கால கட்டத்துக்குப்பிறகு மாணவர்களின் கற்றல் இடைவெளியை குறைக்க ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒரே ஒரு மாணவர் படிக்கும் பள்ளி
இதில் பழனிப்பாதை நகராட்சி தொடக்கப்பள்ளியில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் படித்து வருவது தெரியவந்தது.
4-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவரிடம் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், கற்றல் திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இந்த பள்ளியில் 2 ஆசிரியர்கள் இருந்தனர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆசிரியர் மாற்றுப்பணிக்காக வேறுபள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளதும் ஆய்வின்போது தெரியவந்தது.
உடுமலை பகுதியில் உள்ள பள்ளிகளில் நடந்த இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாக இன்று (சனிக்கிழமை) கோவையில் பள்ளி கல்வித்துறையின் சார்பில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கோவைமண்டல (கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்கள்) அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.