மாவட்ட செய்திகள்

பெருங்காமநல்லூர் பள்ளியை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே உள்ளது பெருங்காமநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்து உள்ளது.

உசிலம்பட்டி,

பேரையூர் தாலுகா, சேடபட்டி அருகே உள்ளது பெருங்காமநல்லூர். இந்த கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்து உள்ளது. ஆனால் இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். இதற்காக அந்த பள்ளி முன்பு மாற்றுத்திறனாளிகள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து பள்ளியை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் கடந்த 1920ம் ஆண்டு ஆங்கிலேயர் கொண்டு வந்த கைரேகை சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடந்தது. அதில் மாயக்காள் என்ற பெண் உள்பட 17 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களது நினைவாக, அப்போதே இந்த கள்ளர் பள்ளி கட்டப்பட்டது. தற்போது இந்த கட்டிடம் நன்றாக தான் உள்ளது. ஒரு விரிசல் கூட இல்லை. எனவே இந்த பள்ளியை நினைவுச் சின்னமாக அறிவித்து பராமரிக்க வேண்டும். இதே போல் ஆங்கிலேயர் காலத்தில் கீழக்குயில்குடியில் கட்டப்பட்ட நீதிமன்றம், சிந்துபட்டியில் உள்ள போலீஸ் நிலையம் ஆகியவற்றையும் நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாத்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.