முன்கதை சுருக்கம்:
தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அருணும், பூர்ணிமாவும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரும் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று வீட்டுமனையை பரிசாகபெற்று, அங்கு புது வீடு கட்டி குடியேறினார்கள். வீட்டின் ஒரு பகுதியில்அருணுடன் போட்டியில் பங்கேற்ற முத்ராவும், மற்றொரு வீட்டில் சுந்தரம் என்பவரும் வாடகைக்கு வசிக்கிறார்கள். கர்ப்பிணியாக இருக்கும் பூர்ணிமாவுக்கு உதவியாக இருப்பதற்கு அவளை வளர்த்து ஆளாக்கிய தாயம்மா கிராமத்தில் இருந்து வருகிறாள். முத்ராவால் அருண் குடும்ப வாழ்க்கையில் குழப்பம் உருவாகிறது. சுந்தரமும் பாதிப்புக்குள்ளாகிறார்.
முத்ராவை வீட்டை காலி செய்ய வைப்பதற்காக, அவள் வீட்டுக்கு செல்லும் தண்ணீர் குழாய் வால்வை அருண் மூடுகிறான். அவளோ அருண் வீட்டிற்குள் நுழைந்து குளிப்பதோடு, குடிநீர் தொட்டிக்குள் குப்பைகளை கொட்டி பிரச்சினையை அதிகப்படுத்துகிறாள். இந்த நிலையில் பூர்ணிமாவின் செல்போனுக்கு அவர்களது படுக்கை அறை காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று வருகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் முத்ரா இருப்பது தெரியவருகிறது. அவள் அருண்-பூர்ணிமாவுக்கு பரிசாக கொடுத்த ஓவியத்தில் கேமிரா மறைத்து வைக்கப்பட்டு அதன் மூலம் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது. இதை பார்த்ததும் அருண் ஆத்திரமடைகிறான். முத்ராவை கடுமையாக திட்டுகிறான். அவளோ வீடியோவை அழிக்க வேண்டுமானால் அபார்ட்மெண்டை தனது பெயருக்கு எழுதி தருமாறு மிரட்டுகிறாள். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தன்னிடம் ஐடியா இருப்பதாக சுந்தரம் கூறுகிறார்.
அது என்ன சூப்பர் ஐடியா..? என்று ஆர்வத்துடன் சுந்தரத்தின் முகத்தைப் பார்த்தான், அருண்.
சுந்தரம் தன் குரலை இறக்கிக்கொண்டு ரகசியமாகச் சொன்னார்:
பொதுவாவே வீட்டுக்குள்ள ஆமை, வவ்வால், ஆந்தை இதெல்லாம் வந்தா ஆகாதுன்னு சொல்வாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு நாடோடிக் கூட்டம் இருக்கு. அவங்க எலி, பூனை, அணில்னு எது கேட்டாலும் பிடிச்சுத் தருவாங்க. அவங்ககிட்ட சொல்லி நான் ஒரு வவ்வால் கொண்டுவரேன். அதை அவ வீட்டுக்குள்ள விடுவோம்..
சப்பென்றாகிவிட்டது, அருணுக்கு. வவ்வாலா..? அந்த பழைய மூட நம்பிக்கைலாம் முத்ராவுக்கு இருக்கும்னு எனக்குத் தோணல..
சரி, மூட நம்பிக்கை வேணாம்.. அந்த நாடோடி குரூப்புல ஒருத்தனை கூட்டிட்டு வரேன்.. முத்ரா போர்ஷனுக்குள்ள ரெண்டு பாம்பு விட்டுடுவோம். ஊர்லேர்ந்து அவ திரும்பி வந்து பாம்பைப் பார்த்தா கண்டிப்பா மெரண்டு போயிடுவா.. என்று சுந்தரம் சொன்னார்.
பக்கத்தில் உட்கார்ந்திருந்த கல்பனா கோபத்துடன் அவரை முறைத்தாள். பொட்டென்று அவர் தொடையில் அடித்தாள்.
நீங்க வங்கி அதிகாரி.. புத்திசாலித்தனமா பேசுவீங்கன்னு நினைச்சேன்.. இப்படி கேவலமா ஐடியா சொல்றீங்க..? இங்கென்ன சினிமா ஷூட்டிங்கா நடக்குது..? பாம்பை கொண்டுபோய் அவ வீட்டுல விட்டா, அது அங்கேயே சுத்திட்டிருக்குமா..? முத்ரா வீட்லதான் இருக்கணும், பக்கத்து வீட்டுக்கு போகக் கூடாதுன்னு அதுக்கு உத்தரவு போடுவீங்களா..? ஒரு சந்து கிடைச்சு பாம்பு நம்ம வீட்டுக்குள்ள வந்துருச்சுன்னா..? நம்ம வீட்ல தேவகினு உங்களுக்கு ஒரு குட்டி மகள் இருக்கா.. முதல்ல அபத்தமான ஐடியா கொடுக்கறதை நிறுத்துங்க..
எனக்கும் பாம்பு ஐடியாலாம் கொஞ்சம்கூட பிடிக்கல.. என்றாள் பூர்ணிமா.
சுந்தரத்தின் முகம் தொங்கிப்போனது.
சரி, வேற ஐடியா யோசிச்சிட்டு வரேன்.. என்று மேற்கொண்டு அசிங்கப்படக்கூடாது என்று அவர் எழுந்து போய்விட்டார்.
எதிலும் கருத்து சொல்லாமல், எல்லாவற்றையும் சமையலறையிலிருந்து கவனித்தபடி, தாயம்மா முத்ராவை நினைத்து நினைத்து தனக்குள் குமைந்துகொண்டிருந்தாள்.
* * *
இரவு.
படுக்கையறை விளக்கை அணைத்ததும், பூர்ணிமா தன் போர்வையை உதறி தரையில் விரித்தாள்.
ஏய், என்ன ஆச்சு..? என்று பூர்ணிமாவைத் தொட்டதும், அவள் அவனை உதறி விலக்கினாள். பதறிப்போனான், அருண்.
முத்ரா இந்த வீட்டை காலி பண்ணிட்டுப் போறவரைக்கும், நான் உன் கூட சேர்ந்து படுக்க மாட்டேன், அருண்.. என்று பூர்ணிமா நடுங்கும் குரலில் சொன்னாள்.
முட்டாள்.. அதுக்காக நீ தரையில படுப்பியா..? கட்டில்ல ஏறிப் படு.. நான் கீழ படுக்கறேன்.. என்று சொல்லிவிட்டு, விரித்த போர்வையில் அருண் படுத்தான்.
கணவன், மனைவிக்குள் இருந்த அன்பான நெருக்கத்தைக்கூட ஒருத்தி குறுக்கில் புகுந்து பிரித்துவிட்டாளே என்று ஆத்திரம் பொங்கியது. ஆனால், செயலற்றவனாக அதை அருண் அடக்கிக்கொண்டான்.
* * *
மறுநாள் அதிகாலையிலேயே அழைப்புமணி ஒலித்தது. தாயம்மா கதவைத் திறந்தாள்.
வாசலில் சிறு பெட்டியுடன் முத்ரா நின்றாள். தாயம்மாவைப் பார்த்து, முகத்தை லேசாகச் சுளித்தாள்.
ஊருக்குக் கௌம்பற நேரம், உங்க மூஞ்சில முழிக்க வேண்டியிருக்கா..?
நீ போற வண்டி கவுந்துதான் போகட்டுமே.. எல்லாருக்கும் நிம்மதி.. உன் மூஞ்சில முழிச்சதுக்கு நான்தான் ரெண்டுதரம் குளிக்கணும்.. என்று தாயம்மா கலங்காமல் சொல்லிவிட்டுத் திரும்பினாள்.
ஏய், என்ன பிரச்சினை..? என்று குரல் கொடுத்தபடி பூர்ணிமா வந்து சேர்ந்தாள்.
உன் புருஷன்கிட்ட, நான் ஊர்லேர்ந்து வரதுக்குள்ள, ஒரு நல்ல வக்கீலைப் பார்த்து, பத்திரத்தை எழுதி ரெடி பண்ணிவெக்கச் சொல்லு.. என்று சொல்லிவிட்டு, முத்ரா காத்திருந்த வாடகைக் காரில் ஏறிப் போனாள்.
படுக்கையறை வாசலில் நின்று இதை கவனித்த அருண் ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
* * *
என்னடா, ஆபீஸ் போகலியா..? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்டான், மோகன்.
அலுவலகத்துக்கு விடுப்பு போட்டுட்டேன், மோகன்.. அந்த முத்ரா மேட்டர் சிக்கலாகிட்டே போகுதுடா.. என்றபடி அருண் அவனெதிரில் அமர்ந்தான்.
நீ சொன்னபடி தண்ணியை நிறுத்திப் பார்த்தேன். கரண்ட்டை கட் பண்ணிப் பார்த்தேன். சுவத்துல அடிச்ச பந்து மாதிரி பிரச்சினை எங்க மேலயே திரும்பிவந்து மோதுது, மோகன்..
வீடியோ விவகாரத்தைத் தவிர்த்து தன்னுடைய சங்கடத்தை அவனிடம் விளக்கினான், அருண்.
சற்று நேரம் யோசித்துவிட்டு, மோகன் விரலைச் சொடுக்கினான்.
இன்னொரு பக்கா ஐடியா சொல்லட்டுமா..?
சொல்லு..!
மாடி போர்ஷன் கதவுல எந்த மாதிரி பூட்டு போட்டிருக்கே..?
கதவை சாத்தினா தானா லாக் ஆகுமே, அந்த மாதிரியான பூட்டு..
வெரி குட்.. மரவேலை செய்றவரைக் கூப்பிடு. அந்தப் பூட்டை கழட்டி எடுத்துடு.. இன்னொரு பூட்டு அதே மாதிரி வாங்கி, அங்க பொருத்தச் சொல்லு.. முத்ரா திரும்பி வரும்போது, அந்த சாவியை போட்டு அவளால அதைத் திறக்க முடியாது. கழுத்தைப் பிடிச்சுத் தள்ளாம, வெளியேத்திடலாம்..
அவ பொருள்லாம் உள்ள இருக்கே..
அவ சண்டை போட்டா, எல்லாத்தையும் தூக்கி வெளில வெச்சிரு..
அது எப்படிடா..?
நீ மொதல்ல வாடகைக்கு வீடு எடுத்தியே.. உன் ப்ரெண்டு குடிச்சு கலாட்டா பண்ணினதால அந்த வீட்டுக்காரர் உங்களைத் துரத்தினாரே.. அவர் அப்படித்தானடா பண்ணாரு..? நீ எதுவும் பிரச்சினை பண்ணியா..?
ஆனால், அவரை மிரட்ட, என்னிடம் ஆபத்தான வீடியோ எதுவும் இல்லையே என்று மனதுக்குள் நினைத்தபடி, முத்ரா எங்களை மாதிரி இல்லடா.. என்றான், அருண்.
பிரச்சினை பண்ணட்டும்.. எவ்வளவு தூரம் போறானு பார்ப்போம்.. என்றான் மோகன்.
உனக்கு யாராவது சைபர் கிரைம் போலீஸைத் தெரியுமா, மோகன்..?
இதுக்கு எதுக்கு சைபர் கிரைம்..?
இல்ல.. அது வேற பர்சனல் பிரச்சினை..
தெரியும்.. சாந்தாராம்னு ஒருத்தர் இருக்காரு.. ரொம்ப நல்லவரு.. என் பேரைச் சொல்லு..
தேங்க்ஸ்டா..
* * *
அன்றைக்கே மரவேலைகள் செய்பவரை வீட்டுக்கு அழைத்து வந்தான் அருண். வீட்டின் சொந்தக்காரன் என்ற முறையில், தன்னிடமிருந்த மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி முத்ரா வீட்டுப் பூட்டைத் திறந்தான்.
அதிகம் சேதப்படுத்தாம, இந்தப் பூட்டை எடுத்துட்டு, இதே மாதிரி புதுப் பூட்டு ஒண்ணு இங்க பொருத்தணும்.. என்றான்.
ஒல்லியாக, மீசை மட்டும் பெரிதாக வைத்திருந்த அந்தப் பெரியவர், தன் கருவிகளைக் கீழே வைத்துவிட்டு, பூட்டை ஆராய்ந்தார்.
இந்தப் பூட்டே புதுசா இருக்கே, சார்.. ஓ, மிச்ச சாவியை பஸ்ல பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்களா..? திருடன் கையில மாத்து சாவி இருந்தா, பூட்டை மாத்திடறதுதான் நல்லது.. என்று அவராகவே ஒரு காரணம் சொல்லிவிட்டு, வேலையில் இறங்கினார்.
ஒரு மணி நேரத்தில் முத்ரா வீட்டுக் கதவில் இருந்த பழைய பூட்டு அலுங்காமல், நசுங்காமல் கழற்றப்பட்டு, அந்த இடத்தில் புதிய பூட்டு பொருத்தப்பட்டது.
இது சூப்பர் ஐடியா. எனக்குத் தோணாமப் போயிருச்சே.. என்று மாலை வீடு திரும்பியதும், சுந்தரமும் அருணைப் பாராட்டினார்.
* * *
மறுநாள் விடியல் நேரம். வாசலில் வாடகைக் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டு, பூர்ணிமா ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். அதிர்ந்தாள்.
அருண்..! முத்ரா திரும்பி வந்துட்டா..! என்றாள்.
ஒரு வாரம் கழிச்சுதானே வருவேன்னு சொன்னா..? என்றபடி அருண், படக்கென்று எழுந்து உட்கார்ந்தான். என்ன நடக்குதுனு வேடிக்கை பாரு.. ஆனா, நீ குறுக்கப் பேசி பிரச்சினைல மாட்டிக்காத..
முத்ரா படிகளில் ஏறிப் போனாள். தன்னிடமிருந்த சாவியால் கதவைத் திறக்க முயன்றாள். பல முறை முயன்றும் முடியவில்லை. கீழே கதவிடுக்கில் சிந்தியிருந்த மரத்தூளைப் பார்த்தாள்.
எதிர் வீட்டு ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த கல்பனாவைப் பார்த்துப் புன்னகைத்தாள்.
ஓ..! நான் இல்லாதபோது, பூட்டை மாத்திட்டாங்களா..? அதுவும் ஒரு விதத்துல நல்லதுதான்.. என்று சொல்லிவிட்டு, பெட்டியை எடுத்துக்கொண்டு இறங்கிப் போனாள்.
அவள் கைதட்டி, ஓர் ஆட்டோ பிடித்து பெட்டியுடன் ஏறுவதை ஜன்னல் வழியே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான், அருண்.
அது பூதாகாரமான பிரச்சினையாக வெடிக்கப்போகிறது என்பது அருணுக்கு அப்போது தெரியாது.
-தொடரும்