வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டம் நெடுங்குன்றம் கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ் குமார் (வயது 28). இவர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் செங்குரங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட போது, பால்ராஜ் குமாரை குரங்கு தாக்கியது. இதில் பால்ராஜூக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பணிக்கு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் செங்குரங்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபடும்படி பூங்கா வனத்துறை அதிகாரி கூறியுள்ளார். இதற்கு செங்குரங்குகளை பராமரிக்கும் பணிகளை தராமல் சில நாட்களுக்கு வேறு பணி ஒதுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு அதிகாரி மறுப்பு தெரிவிக்கவே, மனவேதனை அடைந்த ஊழியர் பூங்காவில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்து மயங்கி கீழே விழுந்தார்.
இதையடுத்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு அவரை சக ஊழியர்கள் மீட்டு, உடனடியாக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர் தீவிர பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.