மாவட்ட செய்திகள்

மாவட்டத்தில் 6 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும் ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் 6 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படும்

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் லோகநாதன், ஆவின் துணை பொது மேலாளர் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கால்நடை பேராசிரியர் தேவேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் சம்பத் தலைமை தாங்கி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் இணைந்து 6 லட்சத்து 5 ஆயிரத்து 550 கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. இந்த பணி அடுத்த மாதம் (மார்ச்) 1ந் தேதி முதல் 21ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் 200 மருத்துவக்குழுக்கள் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளது.

கிராமங்களில் கால்நடை வளர்ப்போருக்கு தடுப்பூசி போடப்படும் நாள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். அந்த நாட்களில் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோமாரி நோய் தடுப்பூசி போட்டு, தங்கள் கால்நடைகளை பாதுகாத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே நாளில் அனைத்து பசு, எருமைகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும், பசுக்கள், எருமைகள் கருவுற்றிருந்தாலும் தடுப்பூசி போடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது, கன்றுகளுக்கும் நோய் எதிர்ப்பு திறன் ஏற்படும் என்பதால் தயக்கமின்றி கோமாரி நோய் தடுப்பூசி மேற்கொண்டு, கோமாரி நோய் வரும்முன் தங்கள் கால்நடைகளை நோயில் இருந்து காத்திடுங்கள்.

இவ்வாறு கலெக்டர் சம்பத் கூறினார்.