மாவட்ட செய்திகள்

தெருநாய்கள் கடித்து 50 பேர் படுகாயம்

தெருநாய்கள் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலம் பகுதியில் தெருநாய்கள் கடித்து 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

50 பேர் காயம்

திருமங்கலம் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தெருநாய்கள் சாலைகளில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதன் காரணமாக வீதிகளில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் நாய்களுக்கு வெறி தன்மை அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

திருமங்கலம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் சுற்றி திரியும் தெரு நாய்கள் நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் என கடந்த இரண்டு தினங்களாக 50-க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. இதில் இன்று மட்டும் 22 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அச்சம்

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நாய்கள் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் உள்ளோம். தினமும் பலர் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனர்.

இருசக்கர வாகனங்களில் செல்வோரை நாய்கள் கடிக்க துரத்துவதால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தை சந்திக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கிறது. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த ஒன்றிய அலுவலகம் மற்றும் நகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.