ஊத்தங்கரை:
ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் லாரி டிரைவர் இறந்தார். அவரது நண்பர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஸ் மோதியது
ஊத்தங்கரை அருகே உள்ள கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 36). லாரி டிரைவர். அதே பகுதியை சேர்ந்தவர்கள் கோடீஸ்வரன் (38), வெங்கடேசன் (22). நண்பர்களான இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் அனுமந்தீர்த்தத்தில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
பாவக்கல் கூட்ரோடு வழியாக சென்றபோது திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பிரபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோடீஸ்வரன், வெங்கடேசன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை போலீசார் விரைந்து வந்து பிரபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.