மாவட்ட செய்திகள்

வனப்பகுதியில் கடும் வறட்சி: நீர்நிலைகளை தேடி அலையும் வனவிலங்குகள்

வனப்பகுதியில் கடும் வறட்சியால் நீர்நிலைகளை வனவிலங்குகள் தேடி அலைகின்றன. காய்ந்து கிடக்கும் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. வனவிலங்குகளுக்காக தற்போதைய கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வனத்துறை அமைச்சராக இருந்தபோது சத்தியமங்கலத்தில் இருந்து பண்ணாரி செல்லும் வழியில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது.

இந்த தொட்டியில் ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொட்டியில் யானை முதல் சிறிய விலங்குகள் வரை சிரமமின்றி தண்ணீர் குடித்து செல்லும். மேலும் மழை பெய்யும்போது குட்டையில் தண்ணீர் நிரம்பி வழியும். அப்போது 50க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக வந்து குட்டையில் உள்ள தண்ணீரை துதிக்கையால் உறிஞ்சி குடிக்கும். பின்னர் ஒவ்வொரு யானை மீதும் மற்றொரு யானை துதிக்கையால் தண்ணீரை வாரி இறைத்து குளித்து கும்மாளமடிக்கும்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் குட்டை மற்றும் தொட்டிகளில் தண்ணீர் விடுவதை வனத்துறையினர் நிறுத்தியதால் தொட்டிகள் காய்ந்து கிடக்கின்றன. எனவே தண்ணீர் தேடி வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியே வர தொடங்கியது. வனவிலங்குகள் அருகே உள்ள கிராமத்து தோட்டங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் உள்ளனர். அவ்வாறு வனத்தைவிட்டு வெளியே வரும் வனவிலங்குகள் வனப்பகுதியையொட்டி உள்ள சாலைகளில் செல்லும்போது அந்த வழியாக அதிவேகமாக வரும் வாகனங்களில் அடிபட்டு இறந்து வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளது

வனவிலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காகவே பிரத்யேகமாக ஆழ்குழாய் கிணறு மற்றும் மின்மோட்டார் வசதியுடன் அமைக்கப்பட்ட தொட்டி மற்றும் வனக்குட்டையில் வனத்துறையினர் தண்ணீர் விடாமல் இருப்பதால் வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. எனவே தொட்டியில் தண்ணீர் நிரப்பி வனவிலங்குகளின் தாகத்தை போக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.