கடும் வறட்சி
நீலகிரி மாவட்டம் 60 சதவீதம் வனப்பகுதியை கொண்டது. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்பட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் அதிகமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த வனப்பகுதிகளில் மழை காலங்களில் பச்சை பசுமையாகவும், கோடை காலத்தில் வறட்சியின் காரணமாக வறண்டும் காணப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருவதால் வனப்பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளன.
3 யானைகள் சாவு
இந்த வறட்சியின் காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் உள்ள மரம், செடி, கொடிகள் பட்டுபோய் காட்சியளிக்கின்றன. மேலும் புல்வெளிகளும் கருகி எளிதில் தீப்பிடிக்கும் நிலையில் உள்ளன. குறிப்பாக இந்த வனப்பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகள் வறண்டு வரும் நிலையில் குளம், குட்டைகளும் தண்ணீர் இன்றி காட்சி அளிக்கின்றன.
இதன் காரணமாக இந்த வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீர் கிடைக்கும் இடங்களை நோக்கி இடம் பெயர்ந்து செல்ல தொடங்கி உள்ளன. குறிப்பாக காட்டு யானைகள், காட்டெருமைகள் போன்ற தாவர உண்ணிகள் பசுந்தீவன தட்டுப்பாடு காரணமாக கூட்டம், கூட்டமாக இடம் பெயர்ந்து வருகின்றன.
இதனிடையே முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சீகூர், சிங்காரா வனப்பகுதிகளில் உள்ள வன விலங்குகளுக்கு ஏற்பட்டு உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் கடும் வறட்சியின் காரணமாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 3 யானைகள் இறந்தன.
இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி
மசினகுடி வனப்பகுதியில் கடும் வறட்சியின் காரணமாக பிறந்து 5 மாதமேயான குட்டி யானை நேற்று இறந்தது. மேலும், தெப்பக்காடு வனப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் சரவணன் உத்தரவின் பேரில் கோவை மண்டல வனகால்நடை டாக்டர் மனோகரன், தெப்பக்காடு வனச்சரகர் ஆரோக்கிய சாமி மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானைகளின் உடல்களை பரிசோதனை செய்தனர்.
இதில், கடும் வறட்சியின் காரணமாக அந்த யானைகள் இறந்தது தெரியவந்தது. இதேபோல் நெலாக்கோட்டை வனப்பகுதியில் இறந்து பல நாட்களான யானையின் உடலை வனத்துறை யினர் கண்டுபிடித்தனர்.
பின்னர் முதுமலை யானைகள் முகாம் கால்நடை டாக்டர் விஜயராகவன் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள கடும் வறட்சியின் காரணமாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 3 யானைகள் இறந்தது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.