மாவட்ட செய்திகள்

மழை காரணமாக லாரிகள் செல்ல முடியாததால் வெள்ளியங்காடு பாறைக்குழியில் குப்பைகளை கொட்டுவதில் சிக்கல்

மழை காரணமாக லாரிகள் செல்ல முடியாததால் திருப்பூர் வெள்ளியங்காடு பாறைக் குழியில் குப்பை கொட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

அனுப்பர்பாளையம்

திருப்பூர் மாநகராட்சி அனைத்து வார்டுகளிலும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டும் வகையில் அந்தந்த பகுதிகளில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பின்னர் லாரிகள் மூலமாக அந்த குப்பைகள் அங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு நல்லூர் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு பாறைக்குழியில் கொட்டப்பட்டு வந்தன. அந்த பாறைக்குழி நிரம்பியதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் உள்ள மற்றொரு பாறைக்குழியை மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக தேர்வு செய்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அந்த பாறைக்குழியில் குப்பை கொட்டுவதிலும், அந்த பகுதிக்கு குப்பை லாரிகள் சென்று வருவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் அதிக அளவில் தேங்கி உள்ளது. மேலும் சமீப நாட்களாக குப்பைகளை கொட்டுவதில் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு வருவதால் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் அவசர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி செயற்பொறியாளர் திருமுருகன், 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார், சுகாதார அலுவலர்கள் முருகன், ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தரமான இடத்தை போர்கால அடிப்படையில் தேர்வு செய்வது என்றும், தேங்கி உள்ள குப்பைகளை துரிதமாக அகற்றுவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் குப்பை கொட்டப்பட உள்ள பாறைக்குழியின் உரிமையாளர் மற்றும் பாறைக்குழி அமைந்துள்ள பகுதி பொதுமக்களின் முழு சம்மதத்தையும் பெற்ற பின்னரே அந்த இடத்தை முடிவு செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அமைச்சர், சபாநாயகர், மாவட்ட கலெக்டர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட உள்ளதாக விஜயகுமார் எம்.எல்.ஏ. தெரிவித்தார். இந்த கூட்டத்தில் முன்னாள் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், வளர்மதி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் முருகசாமி, கணேஷ், பாலசுப்பிரமணியம் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.