வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்பதி (வயது 38). சமத்துவ மக்கள் கட்சியின் லத்தூர் ஒன்றியச் செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அருள்பதி கூடுவாஞ்சேரியில் தங்கி ஏற்றுமதி ஆடை நிறுவனத்தில் சமையல் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் அருள்பதிக்கும், மாடம்பாக்கம் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த உஷா (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை உஷாவின் உறவினர்கள் கண்டித்தனர். ஆனால் அருள்பதி தொடர்ந்து உஷாவிடம் பழகி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உஷாவின் உறவினர்கள் சுந்தர், வெங்கடேசன் ஆகியோர் கடந்த 17ந் தேதி மாடம்பாக்கம் அந்தோணி பில்லர் என்ற இடத்தில் அருள்பதியை அடித்துக்கொலை செய்தனர்.
இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர், வெங்கடேசன் ஆகிய இருவரையும் ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கொலை செய்ய உடந்தையாக இருந்ததாக கள்ளக்காதலி உஷா (35) மற்றும் ஜானகிராமன் (39), சீனிவாசன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.