நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 2 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) 1 மி.மீட்டரும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 5 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தெற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 102.2 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 78.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும், அதிகபட்சமாக 70 சதவீதமாகவும் இருக்கும். தண்ணீர் பற்றாக்குறையால் போதிய அளவு பசுந்தீவனம் கிடைக்காதபோது, ஹைட்ரோபோனிக் பசுமை குடில் முறையில் பசுந்தீவனம் உற்பத்தி செய்து, கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தலாம்.
ஈக்கள் கட்டுப்பாடு
தற்போது நாமக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்பசலனம் அதிகமாக உள்ளது. இது பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருப்பதால், அதிகளவு பூச்சிகள் உற்பத்தியாகி வருகின்றன.
எனவே கோழிப்பண்ணைகளில் ஈக்கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பிள்களை மாற்ற வேண்டும். இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.