மாவட்ட செய்திகள்

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் பலி

தென்காசியில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலியானார். நெல்லை, தூத்துக்குடியில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 590 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 15 ஆயிரத்து 308 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். 69 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 213 பேர் இறந்துள்ளனர்.

முதியவர் சாவு

தென்காசி மாவட்டத்தில் நேற்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. 75 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுவரை 8 ஆயிரத்து 431 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 8 ஆயிரத்து 239 பேர் வீடு திரும்பி உள்ளனர். 33 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 159 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 280 ஆக உள்ளது. இதில் 16 ஆயிரத்து 113 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 141 பேர் இறந்து உள்ளனர்.