ஈரோடு,
ஈரோடு மாநகராட்சி பகுதியில் புதைவட மின்சார கேபிள் போடும் பணி நடந்து வருகிறது. சில பகுதிகளில் இந்த பணிகள் முடிந்து விட்டாலும் சில பகுதிகளில் மிகவும் மெத்தனமாகவே பணிகள் நடந்து வந்தது. சாலையில் பள்ளம் தோண்டி போடப்பட்ட கேபிள்கள் அதற்கான மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்மர்) பொருத்தப்படாமல் உள்ளன. புதிய டிரான்ஸ்பார்மர்களுக்கான கட்டமைப்பு உருவாக்கப்படாமல் இருப்பதே மின்கேபிள்கள் பொருத்தப்படாமல் இருக்க காரணமாகும்.
இவ்வாறு டிரான்ஸ்பார்மரில் பொருத்தப்படாத கேபிள்கள் ஆங்காங்கே சாலையோரங்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் சுற்றி போடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் ஈரோட்டில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. ஈரோட்டில் 104 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருந்தது. இது சமீபகாலத்தில் பெய்த மழைகளில் அதிகமான மழையாகும். இதன் காரணமாக அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஈரோடு காந்திஜி ரோடு பகுதியில் காளைமாடு சிலை, சென்னிமலை ரோடு பகுதிகளில் இருந்து வடிந்து வரும் வெள்ளம் ஆறாக பாய்ந்து அங்குள்ள சாக்கடை வாய்க்கால் வழியாக சென்று பெரும்பள்ளம் ஓடையில் கலக்கும். ஆனால் தீயணைப்பு நிலையம் அருகே சாக்கடை வாய்க்காலில் மின்சார வாரியத்தினர் சுற்றி போட்டு இருந்த மின்சார கேபிள்கள் சாக்கடை வாய்க்காலில் தண்ணீர் பாய்ந்து செல்ல தடை ஏற்படுத்தியது.
நேற்று காலையில் சாக்கடை கால்வாய் நிரம்பி சாலையில் தண்ணீர் பாய்ந்தோடிக்கொண்டு இருந்தது. இதுபற்றி தகவல் அறிந்த மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆனால், அங்கு போடப்பட்டு இருந்த கேபிள்களை அகற்ற முடியாமல் தூய்மைப்பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். கடைசியில் சாக்கடைக்குள் தேங்கி நின்ற கழிவு நீரில் இறங்கி கைகளை உள்ளே போட்டு அடைப்புகளை எடுத்து விட்டனர்.
கொரோனா தொற்று பீதியில் மக்கள் அனைவரும் வீடுகளில் அடைந்து இருக்கும்போதும், சாக்கடை அடைப்பினை எடுக்க கடமை உணர்வுடன் சாக்கடையில் இறங்கிய தூய்மை பணியாளர்களின் பணி பாராட்டுக்கு உரியது. ஆனால், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அவர்கள் சாக்கடைக்குள் இறங்கி பணியாற்றியதை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது.
இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருக்க சாக்கடை அடைப்புகளை முன்னதாகவே சரிபார்க்க வேண்டும். இதுபோல் பல பகுதிகளிலும் சாக்கடையில் சுற்றி வைத்திருக்கும் மின்சார கேபிள்களை பாதுகாப்பாக மாற்றி வைக்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு தேவையான அனைத்து வகை பாதுகாப்பு உபகரணங்களும் வழங்குவதுடன், அவர்கள் அதை அணிந்து பணியாற்ற பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஒருவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.