ஆவூர்:
விராலிமலை தாலுகா, மதயானைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் கெஞ்சரன் மகன் பால்ராஜ் (வயது 39). விவசாயியான இவர், மதயானைபட்டியில் சொந்தமாக வீடு கட்டி வந்தார். இந்நிலையில் அவர் நேற்று காலை புதிதாக கட்டி வரும் வீட்டின் கட்டிடத்திற்கு வீட்டின் அருகே உள்ள போர்வெல் பைப் மூலம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். பின்னர் மோட்டார் சுவிட்சை நிறுத்த முயன்றபோது எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் மயங்கிய நிலையில் கிடந்த பால்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.