திருப்புவனம்,
கீழடி அகழாய்வுக்கு அதிக நிதி ஒதுக்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்று அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் புகழாரம் சூட்டினார்.
8-ம் கட்ட அகழாய்வு
திருப்புவனம் அருகே உள்ள கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் தொல்லியல் துறை மூலம் 8-ம் கட்ட அகழாய்வு பணி தாடக்க விழா நேற்று காலை நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கி வைத்தார்.
கீழடியில் நடந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்பு 8-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும் இடத்தை பார்வையிட்டு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசியதாவது:-
கீழடி பெருமை
தமிழர்கள் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே பண்பாடு மற்றும் கலாசாரத்துடன் வாழ்ந்து உள்ளனர் என்ற பெருமை கீழடி அகழாய்வால் உலகிற்கு தெரிய வந்து உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த முன்னோர்கள் நவநாகரிக ஆபரணங்கள் பயன்படுத்தியது, எழுத்துச்சுவடிகள், தற்காப்பிற்காக பயன்படுத்திய ஆயுதங்கள், கட்டுமானப் பொருட்கள் என பலதரப்பட்ட பொருட்கள் இதுவரை நடந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புக்கள் மேலும் அறியும் வண்ணம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்கி வைத்து உள்ளார்.
தமிழர்களை பாதுகாக்கும் தலைவர்
இதன் மூலம் தமிழகத்தில் தொன்மை வாய்ந்த வரலாற்று சிறப்புகள் கிடைக்கும் இடங்களை கண்டறிந்து, அகழ்வாராய்ச்சி பணிகளை செயல்படுத்தி முன்னோர்களின் கலாசாரத்தையும், பண்பையும் இளம் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். இதன் மூலம் கலாசாரங்களையும், தமிழர்களையும் எப்பொழுதும் பாதுகாக்கும் தலைவராக திகழக்கூடியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே தான்.
கீழடியில் முதலில் மத்திய அரசு 3 கட்டங்களாக அகழாய்வு பணிகளை செயல்படுத்தி வந்தது. கடந்த ஆட்சியாளர்கள் அகழ்வாராய்ச்சி பணிக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முழுமையாக செயல்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.
ரூ.5 கோடி ஒதுக்கீடு
தற்போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கி அகழ்வாராய்ச்சி பணிகளை தொய்வின்றி நடத்த உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அகழாய்வு பணிக்கு அதிக நிதி ஒதுக்கியவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மேலும் கொந்தகை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் அருங்காட்சியகம் இன்னும் ஓரிரு மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு தமிழக முதல்-அமைச்சரால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தொல்லியல் துறை உதவி இயக்குனர் ரமேஷ், திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜன், யூனியன் ஆணையாளர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோசப் அருள்ராஜ், திருப்புவனம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தலைவர் சேங்கைமாறன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், மற்றும் தொல்லியல் அலுவலர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.