சியாச்சினில் மைனஸ் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கும் குறைவான பனி தாக்கங்களுக்கு மத்தியில் இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கரடுமுரடான நிலப்பரப்பு, உறைபனி காற்று, குலை நடுங்க வைக்கும் குளிர் பனி, குறைவான அளவே ஆக்சிஜன் சுவாசம் போன்ற பல பிரச்சினைகளை ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு தரப்பு ராணுவத்தினருக்கும் அங்கு நிலவும் காலநிலை கடும் சவாலாக இருக்கிறது. பனிச்சரிவுகளில் சிக்கி இரு தரப்பிலும் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒருபுறம் பனிப்பொழிவு சிரமத்தை அதிகப்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் ஆக்சிஜன் பற்றாக் குறையும் சுவாசத்திற்கு பெரும் சவாலாக விளங்கி கொண்டிருக்கிறது. பெரும்பாலான சமயங்களில் சிலிண்டர்களில் ஆக்சிஜனை சுமந்தபடி சுவாசம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்தநிலையில் வீரர்களுக்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதற்கான முயற்சியில் புனே தம்பதி ஒன்று களம் இறங்கி இருக்கிறது. அவர்கள் பெயர் சுமீதா-யோகேஷ் ஷிதாடே. இவர்களில் சுமீதா ஆசிரியை.
யோகேஷ் முன்னாள் ராணுவ வீரர். தற்போது இவர்களுடைய மகன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். அதனால் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும், சவால்களையும் இருவருமே உணர்வுப்பூர்வமாக உணர்ந்தவர்கள். 1999-ம் ஆண்டு முதல் ராணுவ வீரர்கள் நலனுக்காக களப்பணியாற்றி வருகிறார்கள். தற்போது சியாச்சினில் பணிபுரியும் ராணுவ வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் பல மைல் தொலைவில் இருந்து கொண்டு செல்லப்படுகின்றன. சியாச்சின் பகுதியிலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்புவதற்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்த தம்பதியர் ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக சுமீதா தன்னுடைய நகைகளை விற்பனை செய்து நிதி திரட்ட தொடங்கி இருக் கிறார். அவருடைய முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
நான் சியாச்சின் பகுதிக்கு சென்றிருந்தேன். அங்கு நிலவும் பருவநிலை மிகவும் கடுமையானது. கோடை காலங்களில் கூட மைனஸ் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். குளிர்காலத்தில் மைனஸ் 55 டிகிரி காணப்படும். அதனால் பனிப்பொழிவின் தாக்கம் கொடூரமாக இருக்கும். அங்கு பணிபுரிபவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலையிலும் வேதனைகளை அனுபவிக்கிறார்கள். நாம் சுலபமாக சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் 22 ஆயிரம் அடிகளுக்கு மேல் உள்ள அந்த பனி பிரதேசத்தில் மூச்சு விடுவது மிகவும் சிரமம் என்கிறார்.
சியாச்சினில் வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதற்கான கட்டமைப்பை உருவாக்குவது பற்றி யோகேஷ் சொல் கிறார்:
சியாச்சினில் பணியாற்றும் வீரர்களுக்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள் சண்டிகாரில் இருந்து கொண்டு செல்லப்படுகிறது. 22 ஆயிரம் அடி உயரத்துக்கு சிலிண்டர்களை கொண்டு செல்வதில் சிரமமும் இருக்கிறது. அங்கு சிலிண்டர்களை வழங்குவதற்கு போதுமான வசதிகள் இல்லை. அங்கு ஆக்சிஜன் கட்டமைப்பை உருவாக்கினால் வீரர் களுக்கு சுலபமாக ஆக்சிஜன் கிடைக்க தொடங்கிவிடும். தொலை தூரத்திலிருந்து சிலிண்டர்களை கொண்டு செல்வதற்கான நேரமும், போக்குவரத்து செலவும் குறையும். இதன் மூலம் 9 ஆயிரம் வீரர்கள் பயன் அடைவார்கள் என்கிறார்.