பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இங்கு 3 வேளையும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவர்கள் விடுதியில் நேற்று காலை பூரி, கிழங்கு வழங்கப்பட்டது. அப்போது கிழங்கில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு, மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் மாணவர்கள் முறையிட்டனர். தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் மருதுகுட்டியை நேரில் சந்தித்து புகார் தெரிவித்தனர்.
பின்னர் மாணவர்கள் கூறுகையில், சமீப காலமாக விடுதியில் வழங்கப்படும் உணவு சரியாக இல்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு உணவில் கரப்பான் பூச்சி கிடந்தது. இதுகுறித்தும் புகார் தெரிவிக்கப்பட்டது. சுத்தமான உணவு வழங்க பல்கலைக்கழக, நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து, விசாரணை நடத்தப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் மருதுகுட்டி தெரிவித்தார்.