தா.பழூர்:
பாதை அடைக்கப்பட்டது
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கண்டியங்கொள்ளை கிராம பகுதியை சேர்ந்த மக்கள், யாரேனும் உயிரிழந்தால் அவர்களுக்கான 16-ம் நாள் ஈமச்சடங்கை அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் செய்வது வழக்கம். இதற்கு பள்ளி வளாகம் வழியாக ஈமச்சடங்கு செய்யும் ஏரிக்கரைக்கு செல்வார்கள். தற்போது பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் வேலி அமைக்கப்பட்டு, அதன் கதவு பூட்டி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளி வளாகத்தின் கதவு பூட்டப்பட்டிருந்தது. இதனால் நேற்று ஈமச்சடங்கு செய்ய வந்த ஒரு தரப்பினர் பள்ளி வளாகம் பூட்டப்பட்டு பாதை அடைக்கப்பட்டு இருந்ததால் சடங்கு செய்ய எடுத்து வந்த பொருட்களுடன் ஜயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
நிரந்தர பாதை அமைக்க வேண்டும்
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், காலம் காலமாக அரசு பள்ளியின் அருகே உள்ள ஈமச்சடங்கு செய்யும் இடத்திற்கு பள்ளி அருகே உள்ள பாதையை பயன்படுத்தி வந்த நிலையில் முன் அறிவிப்பு இல்லாமல் பள்ளியை சுற்றி வேலி- கதவு அமைத்து பூட்டி விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தா.பழூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த வழியாக தற்காலிகமாக செல்வதற்கு கதவை திறந்து விட்டனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது.
இதை யடுத்து ஈமச்சடங்கு செய்யும் இடத்திற்கு செல்ல நிரந்தரமாக பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.