மாவட்ட செய்திகள்

பண்ருட்டி அருகே மதுவிலக்கு போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம்

பண்ருட்டி அருகே மதுவிலக்கு போலீசாருக்கும், கிராமமக்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் போலீசார் விரட்டியடித்ததால் 10 பேர் காயம்

பண்ருட்டி

பண்ருட்டி அருகே சாராய வேட்டைக்கு சென்றபோது மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் போலீசார் விரட்டியடித்ததால் பொதுமக்கள் 10 பேர் காயம் அடைந்தனர்.

பண்ருட்டி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று காலை வேனில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் அய்யனார் கோவில் அருகில் சென்றதும் வேனை சாலையோரமாக நிறுத்திவிட்டு அங்கே நின்று கொண்டிருந்த இளையராஜா(வயது 24) என்பவரை போலீஸ்காரர்கள் அழைத்து சாராய வியாபாரம் செய்பவர்கள் குறித்து தகவல் கேட்டுள்ளனர். ஆனால் தனக்கு யாரையும் தெரியாது என கூறிய அந்த வாலிபர், தனது செல்போனை எடுத்து பேச தொடங்கினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் ஒருவர் என்ன திமிராக பதில் சொல்கிறாய் என்று கூறி அந்த வாலிபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அவரிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து இளையராஜா தனது கிராமத்துக்கு சென்று ஊர்மக்களிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். அப்போது அந்த வழியாக வேனில் வந்த மது விலக்கு பிரிவு போலீசாரை கிராம மக்கள் வழிமறித்து இளையராஜாவை ஏன் தாக்கினீர்கள், அவரது செல்போன் எங்கே என்று கேட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே திடீரென கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போலீஸ் வேன் அங்கிருந்து செல்ல முடியாதபடி முற்றுகையிட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் போலீஸ் படையினருடன் திருவாமூருக்கு வந்தார். இதையடுத்து கூடியிருந்த பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர்.

இதில் திருவாமூரை சேர்ந்த சேகர், பகத்சிங், பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி உள்பட 10 பேர் காயம் அடைந்தனர். பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துசென்றதையடுத்து போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் திருவாமூரில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.