விருதுநகர்,
விருதுநகர் அரசு ஊழியர் சங்க அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் நூர்ஜகான், பொருளாளர் ராமு, மாநில துணை தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து சத்துணவு ஊழியர்களை முழு நேர ஊழியர்களாக்கி முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு, ஓய்வு பெறும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீத அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வுபெறும் வயதை 60 வயதிலிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும். அரசு துறை காலிப்பணியிடங்களில் சத்துணவு அமைப்பாளர்களுக்கு 50 சதவீதம் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களை வலியுறுத்தி இம்மாதம் 26-ந் தேதி மாவட்ட அளவில் பெருந்திரள் முறையீடு நடத்துவதென்றும் 31-ந் தேதி மாநில நிர்வாகிகள் உயர் அதிகாரிகளை சந்தித்து முறையிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.