பெங்களூரு:
4 பேர் கைது
பெங்களூரு மகாலட்சுமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டி பணத்தை பறித்தனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில், பெண்ணை மிரட்டி பணம் பறித்த தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில், அவர்கள் பெயர் ரவி, அவரது மனைவி மங்களா, சிவக்குமார் மற்றும் சீனிவாஸ் என்று தெரிந்தது. இவர்களில் ரவியும், அவரது மனைவியும் தான் இந்த சம்பவங்களில் மூளையாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அதாவது பெங்களூருவில் வசிக்கும் விதவை மற்றும் விவாகரத்து ஆன பெண்களை குறி வைத்து, அவர்களிடம் பணம் பறிப்பதை தம்பதி தொழிலாக வைத்திருந்தார்கள்.
பெண்களை நிர்வாணப்படுத்தி...
விதவை மற்றும் விவாகரத்து ஆன பெண்களுடன், மங்களா பழக்கத்தை ஏற்படுத்திகொள்வார். பின்னர் அந்த பெண்களுக்கு வேலை வாங்கி கொடுப்பதாக அழைத்து சென்று, அவர்களை நிர்வாணப்படுத்தி மங்களா வீடியோ எடுப்பார். அப்போது பெண் தகராறு செய்ததால், அவர்களை அடித்து, உதைத்து மங்களா தாக்குவார். அந்த நிர்வாண வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டி விதவை மற்றும் விவாகரத்து ஆன பெண்களிடம் பணம் பறித்து வந்தது தெரியவந்து உள்ளது.
கைதான தம்பதி உள்பட 4 பேரிடம் இருநது ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.70 ஆயிரம், ஒரு கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் மகாலட்சுமி லே-அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.