புதுச்சேரி
புதுவை சேதராப்பட்டில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 6 மாதங்களாக வேலை மறுக்கப்பட்டு ஊதியம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு வேலை வழங்கக்கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இந்தநிலையில் தனியார் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அந்த ஆலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி கலந்துகொண்டார். அவரை சந்தித்து மனு கொடுக்க ஊழியர்கள் திட்டமிட்டனர். இதற்காக அவர்கள், கொக்குபார்க் அருகில் கூடி ராஜீவ்காந்தி சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். ஆனால் அவர்களை தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து அவர்கள் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சுமார் 20 பேரை போலீசார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.