ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழியில் குளத்தில் தவறி விழுந்த பசு மாட்டை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது.
பசுமாடு
ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று பிள்ளையார்கோவில் அருகே பொய்கைகுளம் உள்ளது. சமீபத்தில் பெய்த கடும் மழையினால் குளத்தில் தண்ணீர் அதிகமாக உள்ளது. மேலும் குளத்தின் பெரும் பகுதியை ஊதா செடிகள் ஆக்கிரமித்து, பாசி படர்ந்துள்ளது. இந்த குளத்தின் கரை வழியாக தான் கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும்.
இந்தநிலையில் நேற்று மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் குளத்தின் கரையில் மேய்ந்து கொண்டிருந்தன. அதில் ஒரு பசுமாடு புற்களை மேய்ந்தபோது தவறி குளத்துக்குள் விழுந்தது. குளத்தில் உள்ள ஊதா செடிகளுக்குள் சிக்கி வெளியே வரமுடியாமல் பசு தத்தளித்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் பார்த்தனர். உடனே மாட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு...
இதற்கிடையே பசுமாடு படும் பாட்டை நேரில் பார்த்த முருகன் என்பவர் துணிச்சலுடன் குளத்தில் இறங்கி, பசு சகதியில் மேலும் மூழ்காமல் இருக்க கெட்டியாக பிடித்து கொண்டார்.
பின்னர் பசுவின் உரிமையாளர் பூதலிங்கம் கயிறுடன் அங்கு வந்தார். பின்னர் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுவை கயிறுகட்டி மேலே உயிருடன் கொண்டு வந்தனர். வெளியே வந்ததும் பசு துள்ளி குதித்து ஓடியதும், ஒரு உயிரை காப்பாற்றிவிட்ட மகிழ்ச்சியோடு அங்கிருந்தவர்கள் சென்றனர்.
மேலும் குளம் முழுவதும் பாசியும், ஊதா செடியுமாக படர்ந்து இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்கள் குளிக்க முடியாமல் உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் குளத்தை நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.