கோபால்பட்டி:
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை முட்டியதில் குடல் சரிந்து விவசாயி பலியானார்.
புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு
திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் புனித சந்தியாகப்பர், புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது.
காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதில் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் தலைமை தாங்கி ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
பந்தாடிய காளைகள்
ஜல்லிக்கட்டில் முதலில் ஊர் கோவில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பிறகு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்துவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
அப்போது வாடிவாசலுக்கு வெளியே வீரதீரத்துடன் களமாடிய மாடுபிடி வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டினர். ஆனால் பல காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு பேக்கு காட்டிவிட்டு பிடிபடாமல் சென்றன. கம்பீரமான காளைகளை பார்த்ததும் மிரண்டுபோன மாடுபிடி வீரர்கள் சிலர் பார்வையாளர் கேலரியில் ஏறியும், மைதானத்தில் படுத்தும் தப்பிக்க முயன்றனர். சில காளைகள் களத்தில் நின்று விளையாடியதுடன், மாடுபிடி வீரர்களை முட்டி தூக்கிவீசி பந்தாடின. இருப்பினும் மாடுபிடி வீரர்கள், சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கி தங்களது வீரத்தை பறைசாற்றினர். இதனை பார்த்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 600 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சுமார் 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் ஒரு சுற்றுக்கு 50 பேர் வீதம், 8 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டனர்.
விவசாயி பலி
இந்த ஜல்லிக்கட்டில் நத்தம் அருகே உள்ள நடுவனூரை சேர்ந்த விவசாயியான தங்கவேல் (54) தனது காளையை அழைத்து வந்திருந்தார். பின்னர் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட தனது காளையை பிடிப்பதற்காக மைதானத்திற்கு வெளியே தங்கவேல் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த காளையை அவர் பிடிக்க முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த காளை தங்கவேலை முட்டி தூக்கி வீசியது. இதில் குடல் சரிந்த நிலையில் தங்கவேல் உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கவேல் இறந்தார். வளர்த்த காளையே உரிமையாளரின் உயிரை பறித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
25 பேர் படுகாயம்
மேலும் ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த வீரபத்திரன் (25), நல்லாம்பட்டியை சேர்ந்த கருப்பையா (29), வீரசின்னம்பட்டியை சேர்ந்த சரவணன் (27), புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட் (26) உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் புகையிலைப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றனர்.
இந்த ஜல்லிக்கட்டில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா பாத்திரங்கள், வெள்ளி காசுகள் என பல்வேறு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. சிலருக்கு ஆடு பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீஸ்காரர் மீது உருட்டு கட்டையால் தாக்குதல்
புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 100-க்கும் மேற்பட்ட பேலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போட்டி நடந்த இடத்தில் சாணார்பட்டி தனிப்பிரிவு போலீஸ்காரர் மோகன் (39) கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மோகனை கயிறு, உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். இதில் காயமடைந்த மோகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீஸ்காரரை தாக்கிய நபர்கள் குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் புகையிலைப்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.