மாவட்ட செய்திகள்

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

பொறையாறு அருகே பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொறையாறு,

நாகை மாவட்டம், பொறையாறு அருகே திருக்களாச்சேரி, எடுத்துக்கட்டி, சந்திரபாடி, காட்டுச்சேரி பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதனால் நேற்று அந்தபகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க வலியுறுத்தி திருக்களாச்சேரி மெயின்ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு விவசாய சங்கத்தை சேர்ந்த அப்துல்மாலிக் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சித்திக், விவசாயி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின்போது விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய சங்கங்களை சேர்ந்த ரெங்கராஜன், சாமிநாதன், காபிரியேல், பாஸ்கர், செந்தில், சிவராஜ், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் முருகேசன் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தாசில்தார், விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சங்கரன்பந்தல்-பொறையாறு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொறையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.