மாவட்ட செய்திகள்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து புள்ளம்பாடியில் விவசாயிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

கல்லக்குடி,

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 13ந்தேதி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இதற்கு ஆதரவு தெரிவித்து நேற்று காலை 8 மணி அளவில் திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி காமராஜர் சிலை முன்பு புள்ளம்பாடி வாய்க்கால் பாசன விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்த கல்லக்குடி போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர். ஆனால் அதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என கூறி உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்தனர்.

இதை கண்டித்து விவசாய சங்க தலைவர்கள் பி.ஆர்.பாண்டியன், புலியூர் நாகராஜன், விஸ்வநாதன், காங்கிரஸ் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமையில் விவசாயிகள், புள்ளம்பாடி பாசன விவசாய நிர்வாகிகள் சகாதேவன், திருநாவுக்கரசு, தியாகராஜன், மாணிக்கம் ஆகியோர் காவல்துறையை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதியளித்தனர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற உண்ணாவிரதத்தில் புள்ளம்பாடி, வெங்கடாஜலபுரம், பளிங்கானத்தம், சங்கேந்தி, வெள்ளனூர், ஒரத்தூர், மேலரசூர், ஆலம்பாக்கம், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதத்தில் காய்ந்த பயிர்களை தலையில் வைத்துக் கொண்டு கலந்து கொண்டனர்.

மேலும் டெல்லிக்கு சென்று போராடி உடல்நிலை சரியில்லாமல் திரும்பிய விவசாயிகள் பெருமாள், தாவீது, ராஜரெத்திம், நடராஜன் ஆகியோருக்கு மாலை அணிவித்தனர். போராட்டத்தையொட்டி லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு நடராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார், கல்லக்குடி சப்இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ராஜேஸ்வரி உள்பட 200 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.