திருவாரூர்,
தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். அனைத்து நதிகளை நீர்வழி பயண திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும். வறட்சிக்கு தமிழக அரசு கோரிய தொகையை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
இந்த போராட்டத்துக்கு ஆதரவாக கல்லிக்குடி, அடிப்புதுச்சேரி, காணூர் பகுதி கிராம விவசாயிகள் சங்கத்தினர் திருவாரூர், ஆண்டிப்பாளையம் கடைவீதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி விவசாயிகள் நலச்சங்க காணூர் கிளை தலைவர் அழகர்ராஜ் தலைமை தாங்கினார். கல்லிக்குடி கிராம விவசாயிகள் சங்க தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் கலியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, துரைராஜன், ஹாஜா. பாலு, ராஜபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது டெல்லியில் போராட்டம் நடத்தும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக மத்திய- மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.