சாவில் மர்மம்
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி (வயது 30). கூலித்தொழிலாளியான இவருக்கு ஜனனி (28) என்ற மனைவியும் 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக ஜனனி கடந்த மாதம் 24-ந்தேதியன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். ஜனனியின் உடலை அவரது உறவினர்கள் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர்.
ஜனனியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரது உடலை தோண்டி பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை சண்முகம் ஒரு வாரத்திற்கு முன்பு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் மனு அளித்தார்.
பிரேத பரிசோதனை
இதை தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் நேற்று திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியின் மருத்துவர் நாராயண மூர்த்தி தலைமையில், மருத்துவ குழுவினர் நேற்று நரசிங்கபுரம் கிராமத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் மப்பேடு போலீசார் உதவியுடன் ஜனனியின் உடலை தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் மீண்டும் அதே இடத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அப்போது திருவள்ளூர் ஆர்.டி.ஓ ரமேஷ், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். இறந்த ஜனனிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் அவரது சாவு குறித்து ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.