தேவதானப்பட்டி
தேவதானப்பட்டி வடக்குதெருவை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகன் அருண்பாண்டியன் (வயது 24). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இவர், அப்பகுதியை சேர்ந்த 3 பேருடன் மஞ்சளாறு அணைப்பகுதியில் உள்ள ஓடையில் மணல் அள்ளுவதற்காக சென்றார்.
பின்னர் ஓடைப்பகுதியில் உள்ள மணலை அள்ளி மாட்டுவண்டியில் அவர்கள் நிரப்பிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் தேவதானப்பட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் அழகுராஜ் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஓடைப்பகுதியில் 4 பேர் மணல் அள்ளுவதை பார்த்தனர். உடனே அவர்களை பிடிப்பதற்காக அங்கு சென்றனர்.
இதற்கிடையே போலீசார் வருவதை பார்த்து பயந்த அருண்பாண்டியன் உள்பட 4 பேரும் மாண்டுவண்டியை விட்டுவிட்டு தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் பிடிபடவில்லை. இதையடுத்து மாட்டுவண்டியை போலீசார் பறிமுதல் செய்து சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் தப்பிச்சென்ற 3 பேரும் ஊருக்குள் சென்று விவரத்தை கூறினர். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அருண்பாண்டியன் மட்டும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் மஞ்சளாறு அணை அருகே உள்ள தோட்டப்பகுதியில் அவரை தேடினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் அருண்பாண்டியன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து தேவதானப்பட்டி போலீசாருக்கும், பெரியகுளம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அருண்பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போலீசாருக்கு பயந்து ஓடிய போது கிணற்றுக்குள் தவறி விழுந்து அருண்பாண்டியன் பலியானது தெரியவந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் தேவதானப்பட்டிபெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மணல் அள்ளியவர்களை போலீசார் விரட்டிச்சென்றுள்ளனர். அவர்களுக்கு பயந்து தப்பியோடும்போது தான் அவர், கிணற்றில் விழுந்து பலியாகி உள்ளார். எனவே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் வராததால், மறியலை கைவிட்ட உறவினர்கள் தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அருண்பாண்டியன் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உயர் அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். ஆனாலும் சமாதானம் அடையாத உறவினர்கள் அங்கிருந்து கலைந்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றனர். பின்னர் அருண்பாண்டியனின் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் மனு அளித்தனர்.