திருவாரூர்:-
ஊரடங்கை மீறி செயல்பட்ட தனியார் நிதி நிறுவனத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
நிதி நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை
கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் வங்கிகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்கினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிதி நிறுவனங்கள் மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கட்டாய கடன் வசூலில் ஈடுபடக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் அலுவலகம் திறக்கப்பட்டு, மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களிடம் கட்டாய கடன் வசூலில் ஈடுபடுவதாக திருவாரூர் தாசில்தார் நக்கீரனுக்கு தகவல் கிடைத்தது.
நிதி நிறுவனத்துக்கு பூட்டு
இதையடுத்து அவருடைய உத்தரவுப்படி திருவாரூர் வருவாய் ஆய்வாளர் பக்கிரிசாமி, துணை வட்டார வளர்ச்சி அதிகாரி புவனேஷ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் ஆகியோர் தனியார் நிதி நிறுவன அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது ஏராளமான ஊழியர்களுடன் அலுவலகம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள், ஊரடங்கை மீறி நிதி நிறுவனம் செயல்பட்டு வருவதால் உடனடியாக அலுவலகத்தை மூட உத்தரவிட்டனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் அதை ஏற்க மறுத்தனர். இதையடுத்து அதிகாரிகள், நிதி நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் அனைவரையும் வெளியேற்றி அலுவலகத்தை பூட்டி சாவியை எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.