மாவட்ட செய்திகள்

ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம்

அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டையில் தமிழக அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் தலைமையில் நகராட்சி சுகாதாரதுறை ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டியன், ஐயப்பன், பிச்சைப்பாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது எஸ்.பி.கே. பள்ளி சாலையில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட இறைச்சி கடையில் 10 கிலோ எடையுள்ள கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் அந்த இறைச்சிக்கடைக்கு ரூ.ஆயிரம் அபராதம் விதித்தனர்.

அதனை தொடர்ந்து வி.வி.ஆர். காலனி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட மீன் கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

உஜ்ஜிசாமி கோவில் தெரு, மலையரசன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட பலசரக்கு கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர். முககவசம் அணியாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்தவர்கள், குடிதண்ணீர் விற்பனை செய்யும் வாகனங்களை இயக்கியவர்களுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையாளர் எச்சரித்தார்.