நாமக்கல்,
கூடுதல் விலைக்கு வாங்கியதாக புகார்
தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு அரசு சார்பில் கைவிரல் ரேகை பதிவு எந்திரம் (பயோ மெட்ரிக் டிவைஸ்)வழங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்கள் கூடுதல் தொகைக்கு வாங்கப்பட்டு இருப்பதாகவும், இதில் லட்சக்கணக்கில் மோசடி நடந்து இருப்பதாகவும் கூறி, எந்திரங்களை திரும்ப ஒப்படைக்க தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் முடிவு செய்து உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பொது சேவை மையம் உள்ள 91 சங்கங்களுக்கு அரசு சார்பில் கைவிரல் ரேகை பதிவு எந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த எந்திரங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க சம்பந்தப்பட்ட கடன் சங்க செயலாளர்கள் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்தனர்.
மோசடி செய்ய திட்டம் ?
அங்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கருப்பண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது :
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பொது சேவை மைய பயன்பாட்டிற்கு மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மூலம் கைவிரல் ரேகை பதிவு எந்திரம் தேவையற்ற சூழ்நிலையில் வழங்கப்பட்டு உள்ளது. இதன் அடக்கவிலை ரூ.3,400 என அதன் அட்டை பெட்டியில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் ரூ.6 ஆயிரம் வரை விலை நிர்ணயித்து காசோலை பெறப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கூட்டுறவு சங்கங்களுக்கு தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ரூ.1 கோடி வரை நிதி இழப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே இதனை திரும்ப பெற வேண்டும். புதிய நவீன மயமாக்குதல் என்ற பெயரில் சங்க நிதியை மோசடி செய்யும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிகிறது. எனவே இந்த நடவடிக்கையை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.