உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை அருகே கீழப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இந்த திருவிழாவானது பஞ்சபாண்டவர்கள் கதையை மைய்யமாக வைத்து நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த 15-ந்தேதி காப்புகட்டுதலுடன் விழா தொடங்கியது.
பின்னர் தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது. கடந்த 19-ந்தேதி மாலை 5 மணிக்கு பனிப்பெண் பூவெடுக்கும் நிகழ்ச்சியும், 20-ந்தேதி மாலை பக்ஹாசூரனுக்கு அன்னமிடுதல் நிகழ்ச்சியும், 21-ந்தேதி அர்ச்சுனர்க்கும், திரவுபதி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் காலை அர்ச்சுனர் வில்வளைத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் மதியம் 2 மணிக்கு அரவான் களப்பலி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
பின்னர் மாலை 7 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டபத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் நேற்று மஞ்சள் நீராட்டு நடந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை ) மாலை 6 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கீழப்பாளையம் கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.