மாவட்ட செய்திகள்

கல்லம்பட்டியில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி தேத்தி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. போதிய மீன்கள் கிடைக்காமல் கிராமத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே கல்லம்பட்டி தேத்தி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. போதிய மீன்கள் கிடைக்காமல் கிராமத்தினர் ஏமாற்றம் அடைந்தனர்.

திருவிழா

சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லம்பட்டி ஊராட்சியில் உள்ளது தேத்தி கண்மாய். சுமார் 200 ஏக்கர் பாசன வசதி கொண்ட இந்த கண்மாயில் தண்ணீர் வற்றிய நிலையில் மீன்பிடி திருவிழா நடத்த கிராமத்தினர் முடிவு செய்து அறிவிப்பு செய்தனர். அதன்படி நேற்று காலை மீன்பிடித் திருவிழா காலை 7 மணி அளவில் தொடங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

சிங்கம்புணரி, அரசினம்பட்டி, புதுப்பட்டி, காளாப்பூர், எஸ்.வி. மங்கலம், கோவில்பட்டி, சூரக்குடி, முத்துச்சாமி பட்டி போன்ற கிராமங்களில் இருந்து 700-க்கும் மேற் பட்டோர் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொள்வதற்காக கண்மாய் கரையோரத்தில் நின்றனர்.

ஏமாற்றம்

கல்லம்பட்டி கிராமத்து முக்கியஸ்தர் வெள்ளை துண்டு வீசி மீன்பிடி திருவிழாவை தொடங்குவதற்கு முன்னதாகவே மீன் பிடியாளர்கள் கண்மாய்க்குள் இறங்கி வலை வீசி தேட ஆரம்பித்தனர். அதில் ஒரு சிலருக்கு மட்டுமே குரவை, கெளுத்தி, ஜிலேபி போன்ற மீன்கள் குறிப்பிட்ட அளவே கிடைத்தது. போதிய அளவில் மீன்கள் கிடைக்காமல் சிலர் ஏமாற்றம் அடைந்தனர்.