மாவட்ட செய்திகள்

காரைக்குடி அருகே பாரம்பரிய மீன்பிடி திருவிழா

காரைக்குடி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர்.

காரைக்குடி,

காரைக்குடி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஏராளமான கிராம மக்கள் கலந்துகொண்டு மீன்களை அள்ளிச்சென்றனர்.

மீன்பிடி திருவிழா

கோடைக்காலம் தொடங்கி உள்ளதால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களில் தற்போது தண்ணீர் குறைந்து வருகிறது. இதைப்பயன்படுத்தி அங்கு மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டு அங்குள்ள மக்கள் மீன்களை பிடித்து வருகின்றனர்.

நேற்று காரைக்குடி அருகே கே.ஆத்தங்குடியில் உள்ள மூக்கன் கண்மாயில் பாரம்பரிய முறையில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய இந்த மீன்படி திருவிழாவில் கே.ஆத்தங்குடி, பலவான்குடி, குன்றக்குடி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் பாரம்பரிய முறையில் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஊத்தா என்ற கூடையை பயன்படுத்தி மீன்பிடிக்க தொடங்கினர்.

விரால், கெளுத்தி

ஊர் முக்கியஸ்தவர்கள் கொடியசைத்தவும், ஓடோடி சென்ற கிராம மக்கள் கண்மாய்க்குள் இறங்கி போட்டி போட்டு ஊத்தா கூடையை வைத்து மீன்களை பிடிக்க தொடங்கினர். இதையடுத்து அங்கு கட்லா, விரால், கெளுத்தி, பொட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த பாத்திரம் மற்றும் கூடைகளில் வைத்துக்கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த மீன்பிடி விழாவில் தலா நபர் ஒருவருக்கு 2 கிலோவிற்கும் மேல் மீன்களை பிடித்து சென்றனர்.