மாவட்ட செய்திகள்

மீன்: வளர்க்கலாம்.. ருசிக்கலாம்.. பணம் சம்பாதிக்கலாம்..

மீன்களை வளர்ப்பது மற்றும் அவைகளை பயன்படுத்தி உணவுப் பொருட்கள் தயாரிப்பது மூலம் நிறைய பணம் சம்பாதிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

தொழில்ரீதியாக செய்ய விரும்புகிறவர்கள் முதலில் மீன்களை பற்றிய தகவல்களை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். மீன்களை பற்றி பலரும் அறியாத தகவல்கள் நிறைய இருக்கின்றன. அவை ஆச்சரியமளிக்கும் தகவல்களாகவும் இருக்கின்றன. அவை இங்கே தொகுத்து தரப்படுகின்றன.

இந்தியாவில் கடற்கரை 8118 கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் 9, கடற்கரை மாநிலங்களையும், 4 யூனியன் பிரதேசங்களையும் உள்ளடக்கி காணப்படுகிறது. இந்தியாவின் வரையறைக்குட்பட்ட பொருளாதார மீன்பிடி பகுதி 200 நாட்டிகல்(372 கி.மீ.) மைல்களுக்குட்பட்டது. இது 2.02 மில்லியன் கி.மீ. வரை விரிந்து காணப்படுகிறது.

இதில் மேற்கு கடற்கரையானது 0.86 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும், கிழக்கு கடற்கரை 0.56 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 0.53 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவும் கொண்டது. இவற்றிலிருந்து ஆண்டுக்கு தோராயமாக 4.10 மில்லியன் டன் கடல் மீன்கள் பிடிக்கப்படுகிறது. அதனால் இந்திய நாட்டின் வளங்களில் மீன்வளமும் குறிப்பிடத்தக்கது.

மீன்கள் கண்களை கவரும் விதத்தில் பல்வேறு வடிவங்களையும், பலவிதமான நிறங்களையும் கொண்டவை. சுற்றுப்புறத்தின் வெப்பநிலைக்கு ஏற்றவாறு தன் உடல் வெப்ப நிலையை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையவை. அவற்றின் செவுள்கள் தலைமை சுவாச உறுப்புகளாக செயல்படுகிறது. அவற்றின் உடல் செதில்களால் மூடப்பட்டிருக்கிறது. சுறாக்கள், திருக்கை மீன்கள் போன்றவை குருத்தெலும்பு கொண்டவை.

மீன் எண்ணெய்யில் ஒமேகா 3 என்ற நிறைவுறா கொழுப்பு அமிலம் உள்ளது. இது மனித உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுப்பதுடன், கண் பார்வைக்கும், ரத்த அழுத்த நோயை தடுப்பதற்கும் மற்றும் இதய நோய்களை தடுப்பதற்கும் பயன் படுகிறது. கைட்டின், கைட்டோசைமன் மற்றும் குளுக் கோசைமன் போன்றவை இறால் மற்றும் நண்டு ஓடுகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை தொழில் மற்றும் மருத்துவ துறைகளில் பல்வேறு வகைகளில் பயன்படுகிறது.

உலகிலேயே அதிக வேகம் கொண்டது, இந்தோ-பசிபிக் மயில் மீன்கள். அவை மணிக்கு 110 கி.மீ. தூரம் செல்லக் கூடியவை. 3.4 மீ. நீளம் வரை வளரும் இவைகள், சுமார் 100 கிலோ எடை உடையவை. உலகில் மிகப்பெரிய மீன், திமிங்கல சுறாவாகும். 4 மீட்டர் முதல் 12 மீட்டர் வரை இவை வளரக் கூடியவை. 18 மீட்டர் வரையிலும் வளர்ந்த திமிங்கல சுறாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடல் பகுதியில் பவளப்பாறை பகுதிகளில் காணப்படும் கோபி என்ற மிகச்சிறிய மீன் வகைகள், முதுகுத் தண்டுவட உயிரினங்களில் மிகக்குறைந்த நாட்களே (59 நாட்கள்) வாழக்கூடியவை. கஸ்கில் என்ற மீன்கள் மிக ஆழமான பகுதியிலும் உயிர் வாழ்பவை. 20 செ.மீ. நீளம் கொண்ட இவைகள் 8 ஆயிரத்து 370 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியவை.

90 சதவீதத்துக்கும் மேலான ஆழ்கடல் மீன்கள் 700 மீட்டர் ஆழத்தில் சூரிய ஒளி இல்லாத பகுதியில் வசிக்கிறது. இவ் வகையான மீன்கள் பெரும்பாலும் ஒளியை உண்டாக்கும் உறுப்புகளை பெற்றுள்ளன. எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும், இரை மற்றும் தன் துணையை கவரவும் அவை உதவுகின்றன.

மின்சார மீன்கள்


சில வகையான மீன்கள் பலமான 20 முதல் 600 வோல்ட் வரையிலான மின்சார கற்றைகளை உருவாக்குகிறது. அம்மீன்களில் உள்ள லெக் ரோசைட் என்ற செல்களிலிருந்து இவ்வகையான மின்சாரம் உருவாகிறது. தென் அமெரிக்காவில் உள்ள கத்தி மீன்கள் மற்றும் சில வகையான கெளுத்தி மீன்கள், யானை மீன்கள் போன்றவை மின்சாரத்தை உருவாக்கும் திறன் உடையவை. சயினிடே குடும்பத்தைச் சேர்ந்த பன்னா மற்றும் கத்தாளை மீன்கள் நீரின் அடியில் ஒருவிதமான ஒலியை ஏற்படுத்தும் தன்மையை உடையவை.

(தொடரும்)

கட்டுரை: பேராசிரியர் மு.நாகூர்மீரான், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப்பல்கலைக்கழகம், நாகப்பட்டினம்