மாவட்ட செய்திகள்

சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக 35 பேருக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் அபராதம்

டெங்கு காய்ச்சலை பரப்பும் விதமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதாக 35 பேருக்கு ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டம் முழுவதும் தொற்று நோய் பரவாமல் இருப்பதற்காக கிராமத்தை தூய்மையாக வைத்து கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதற்கான பணிகள் மாவட்டம் முழுவதும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லி திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் டெங்கு காய்ச்சலை முற்றிலுமாக தடுக்கும் விதமாக நடைபெற்று வரும் துப்புரவு பணியை திடீரென பார்வையிட்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் அவர் சேலை ஊராட்சியில் நடைபெற்று வரும் சிறப்பு முகாமை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கினார்.

அபராதம்

அப்போது அந்த கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அங்கிருந்த நிலத்தடி நீர்தேக்க தொட்டியில் தேக்கி வைத்துள்ள நீரை உடனடியாக அப்புறப்படுத்துமாறும், தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நீர் தேங்குவதற்கு ஏதுவாக இருக்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறும் பொதுமக்களுக்கும், தூய்மை காவலர்களுக்கும், ஊராட்சி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கினார். 35 பேர் டெங்கு காய்ச்சலை பரப்பும் விதமாக சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்பவ இடத்திலேயே ரூ.2 லட்சத்து 21 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜெ.பிரபாகரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன் மற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.