மாவட்ட செய்திகள்

ரூ.29 லட்சம் கடத்தல் தங்கத்துடன் 4 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் கடத்தல் தங்கத்துடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் ரூ.16 லட்சம் மெமரி கார்டு கடத்தி வந்த பெண் பிடிபட்டார்.

மும்பை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று சவுதி அரேபியாவில் இருந்து விமானம் ஒன்று தறையிறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை பாதுகாப்பு படை பிரிவினர் சோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர். அப்போது 4 பயணிகளின் நடவடிக்கையில் அங்கு இருந்த சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பயணிகளை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். இந்த சோதனையில் அவர்கள் ஆடை, பேனா மூடியில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து அதிகாரிகள் ரூ.29 லட்சம் மதிப்பிலான 927 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் தங்கத்தை கடத்தி வந்ததாக உத்தரபிரேதசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த முகமது ரெகான், முகமது இஸ்தியாக், முகமது இஸ்ரார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

இதேபோல துபாயில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.16 லட்சம் மதிப்பிலான 12 ஆயிரம் 4 ஜி.பி. மெமரி கார்டு, 3 ஆயிரத்து 750 8 ஜி.பி. மெமரி கார்டு கடத்தி வந்த சாய்கா குலாம் என்ற பெண் சுங்க அதிகாரிகளிடம் சிக்கினார். அவர் 3 டின்களில் அடைத்து இந்த மெமரி கார்டுகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சாய்கா குலாமிடம் சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.