தேனி மாவட்டம் ஜெயமங்கலம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 54). இவருடைய மகன் சாந்தகுமார் (28). இவருடைய நண்பர்கள், இதே பகுதியை சேர்ந்த ராம்குமார் (27), அழகுமணி (27), மகேஷ் (27), தஞ்சாவூரை சேர்ந்த உதயகுமார் (27). இவர்கள் சென்னையில் ஒன்றாக தங்கி அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாந்தகுமாருக்கு, பெரியகுளத்தை சேர்ந்த சக்திகுமார் (31), ஜல்லிப்பட்டியை சேர்ந்த ராஜாமணி (30) ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள், தங்கள் நண்பர்களான சென்னையை சேர்ந்த மோகன்ராஜ் (35), மதுரை மாவட்டம் சமயநல்லூரை சேர்ந்த ராமநாதன் (40) ஆகியோருக்கு மலேசியாவில் உள்ள பிரபல நிறுவனங்களில் நல்ல பழக்கம் உள்ளதாகவும், அந்த நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை இருப்பதாகவும் சாந்தகுமாரிடம் கூறினர். மேலும் விசா மற்றும் பாஸ்போர்ட் செலவுகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதை உண்மை என நம்பிய சாந்தகுமார், ரூ.3 லட்சத்தை அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் தனது நண்பர்களான ராம்குமார் உள்பட 4 பேரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். அவர்களும் தங்களுக்கு வேலை வேண்டும் என சக்திகுமார், ராஜாமணியிடம் கூறியுள்ளனர். பின்னர் அவர்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் ரூ.8 லட்சத்து 70 ஆயிரத்தை செலுத்தினர்.
பின்னர் அவர்களுக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் திருச்சியில் இருந்து மலேசியா செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை ராஜாமணி கொடுத்துள்ளார். அதை பெற்றுக்கொண்ட சாந்தகுமார் உள்பட 5 பேரும் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களுடைய பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அவை போலியானது என்று கூறியுள்ளனர். இதையடுத்து ராஜாமணியை அவர்கள் தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டது அவர்களுக்கு தெரியவந்தது.
இதையடுத்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவர்கள் புகார் அளித்தனர். புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஜெயமங்கலம் போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ராஜாமணியை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில் சக்திகுமார் உள்பட 3 பேர் ஏற்கனவே தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.