மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது

முழு ஊரடங்கினால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது.

விருதுநகர்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது. கொரோனா நோய்பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்பேரில் நேற்று முழு ஊரடங்கு விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

குறைவான பயணிகள்

விருதுநகரில் நகரின் அனைத்துப்பகுதிகளும் முழு ஊரடங்கையாட்டி வெறிச்சோடிக் கிடந்தன. சிறு பெட்டி கடைகளும், டீக்கடைகளும் கூட மூடப்பட்டிருந்தன.

தள்ளுவண்டி வியாபாரிகளும் நேற்று தங்கள் தொழிலை மேற்கொள்ளவில்லை. நெடுந்தூர ரயில்களில் வரும் வெளியூர் பயணிகள் பொது போக்குவரத்து இல்லாத நிலையில் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை காரணமாக நேற்று ரயில் பயணத்தை தவிர்த்துள்ளனர். இந்த நிலையில் நேற்று நெடுந்தூர ரயில்களில் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

ஆலங்குளம்

ரயில்நிலைய ஆட்டோக்களும் அதிகாலையில் ஒன்றிரண்டு தென்பட்டாலும் அதன் பின்பு முற்றிலுமாக முடங்கி விட்டன.

மருந்து கடைகளும், பெட்ரோல் நிலையங்களும் மட்டுமே வழக்கம்போல் இயங்கின. நேற்றைய முழு ஊரடங்கு மாவட்ட மக்கள் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு தர முன்வந்துள்ளது தெளிவாக தெரிந்தது.

ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. ஆலங்குளம் சப் -இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சாத்தூர்

சாத்தூரில் முழு ஊரடங்கு காரணமாக நேற்று காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல் சேவை மட்டும் இருந்தது.

முழு ஊரடங்கையொட்டி 150 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நகர்ப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். முழு ஊரடங்கின் போது தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பஸ் நிலையங்கள், பஜார் பகுதிகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. அம்மா உணவகம் திறந்து இருந்தன.

காரியாபட்டி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகாசி உள்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கையொட்டி அமைதியான சூழல் நிலவியது.

முழு ஊரடங்கினால் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அமைதி நிலவியது.