காரைக்கால்
காரைக்காலில் கோவில்கள், பொது இடங்களில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, கடலில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை ஊர்வலம்
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்டத்தில் திருநகர், பெரியபேட், ஒப்பிலார் மணியர் கோவில் வீதி, கோவில்பத்து, நேருநகர், கோட்டுச்சேரி, தருமபுரம், மதகடி, ஏழை மாரியம்மன் கோவில் மற்றும் பொதுஇடங்களில் 54 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் விநாயகர் சிலை ஊர்வலம் இன்று நடைபெற்றது. முன்னதாக கோவில்கள், பொதுஇடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டிராக்டர், மினி டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள ஏழை மாரியம்மன் கோவில் அருகில் கொண்டு வரப்பட்டன.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
காரைக்கால் சக்தி விநாயகர் கமிட்டி மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை பிற்பகல் 3 மணியளவில் சிறப்பு பூஜைக்கு பிறகு அமைச்சர் சாய்.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் இந்து முன்னணி பொதுசெயலர் விஜயன், மாவட்ட தலைவர் கணேஷ், நகர தலைவர் ராஜ்குமார், பா.ஜ.க. மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட தலைவர் சேனாதிபதி, முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சக்தி விநாயகர் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
கடலில் கரைப்பு
ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு சென்றது. அங்கு கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கடலுக்குள் எடுத்துச்சென்று கரைக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திரு-பட்டினத்தில் 18 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருமலைராஜன் ஆற்றில் கரைக்கப்பட்டது. இதேபோல் கோட்டுச்சேரி, நெடுங்காடு, திருநள்ளாறு பகுதிகளிலும் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது.