மாவட்ட செய்திகள்

காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்து கொள்ளுங்கள்

கொரோனா நோய்த்தொற்று இறப்பை தடுக்க காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே பரிசோதனை செய்து, டாக்டர்களின் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடலூர்,

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் இறப்புகளை குறைப்பது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திர சேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நோய்த்தொற்று

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்று ஏற்பட்டு 302 பேர் இறந்துள்ளனர். நோய்த் தொற்று ஏற்பட்டவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கோ அல்லது அரசு மருத்துவமனைக்கோ சென்று சிகிச்சை பெற வேண்டும்.

நோய்த்தொற்று அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் பரிசோதனை செய்து கொள்ள பொதுமக்கள் முன்வர வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை வழங்கப்பட்டு பூரண குணமடையலாம்.

கண்காணிக்க வேண்டும்

சர்க்கரை வியாதி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு தொடர்ச்சியாக மருந்து உட்கொண்டு வருபவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் சிகிச்சை பெற்று வரும் டாக்டர்கள் மூலமாகவோ அல்லது சுகாதார பணியாளர்கள் மூலமாகவோ அவர்களுக்கு அறிவுரை வழங்கி கண்காணிக்க வேண்டும்.

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி டாக்டர்கள், செவிலியர்கள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தேவையான எண்ணிக்கையில் தயார் நிலையில் இருக்க வேண்டும். நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும்.

காய்ச்சல் முகாம்

பரிசோதனை முடிவு வந்தவுடன் தாமதிக்காமல் முடிவுகளை அவர்களுக்கு தெரிவித்து, நோய் தொற்று உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். அனைத்து பகுதிகளிலும் காய்ச்சல் கண்டறியும் முகாம்களை அதிக அளவு நடத்த வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று பரிசோதனைகள், சி.டி.ஸ்கேன் போன்ற விவரங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வரும் நோயாளிகள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

பரிசோதனை

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து செல்ல வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கொரோனா நோய் தொற்று இறப்பை தடுப்பதற்கு பொதுமக்கள் தங்கள் உடலில் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து டாக்டர்களின் ஆலோசனை பெற்றுக்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

மருத்துவக் குழுவினர்களும் அனைத்து பகுதிகளையும் தீவிரமாக கண்காணித்து அதிக பரிசோதனைகள் மேற்கொண்டு கொரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, இணை இயக்குனர் (மருத்துவம்) ரமேஷ்பாபு, அரசு தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் சாய்லீலா, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனை கண் காணிப் பாளர் நிர்மலா மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.