பெங்களூரு:
பெங்களூரு அருகே தேவனஹள்ளி தாலுகாவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு வந்திறங்கிய விமான பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளில் அதிகாரிகள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது எந்த பயணிகளிடமும் தங்கம் கிடைக்கவில்லை. இதற்கிடையில், மாலத்தீவில் இருந்து வந்த ஒரு விமானத்தின் கழிவறையில் தங்கம் கிடப்பதை ஊழியர்கள் பார்த்தனர். இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே அதிகாரிகள், கழிவறையில் கிடந்த தங்கத்தை கைப்பற்றி விசாரித்தனர். ஒட்டு மொத்தமாக 3 கிலோ 200 கிராம் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் இருந்து கடத்தி வந்த தங்கத்தை போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்து கழிவறையிலேயே மர்மநபர்கள் விட்டு சென்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தல் கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.