கரூர்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் புகார் பெட்டி வைத்து அதில் மனுக்கள் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் புகார் பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- 2017-2018-ம் ஆண்டில் படித்த மாணவ, மாணவிகளுக்கு தர வேண்டிய மடிக்கணினி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் எங்களது ஆன்லைன் வகுப்புகளை சரியாக கவனிக்க முடியவில்லை. இதனால் எங்களது கல்லூரி படிப்பு பாதிப்பு அடைகிறது என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
தேவர்மலை ஊராட்சியை சேர்ந்த மோகன்ராஜ் மற்றும் வரவணை ஊராட்சியை சேர்ந்த காளிமுத்து ஆகிய இருவரும் புகார் பெட்டியில் போட்ட மனுவில், தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்பிறகு ஊரடங்கு உத்தரவால் கடந்த மே 1-ந் தேதி மற்றும் ஆகஸ்டு 15-ந் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.
சுமார் 9 மாத கால இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று நடக்க இருந்த கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. கொரோனா சூழலில் சட்டங்கள் இயற்றவும், முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் எந்த அளவிற்கு நாடாளுமன்ற கூட்டமும், சட்டமன்ற கூட்டமும் அவசியமோ, அதே அளவிற்கு கிராமசபை கூட்டங்கள் நடத்துவதும் அவசியம். எனவே போதிய பாதுகாப்பு நெறிமுறைகளை அறிவித்து உடனடியாக கிராமசபை கூட்டங்களை நடத்த வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.
கரூர் அருகே வெள்ளியணையில் உள்ள தனியார் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போட்ட மனுவில், நாங்கள் மேற்கண்ட கல்லூரியில் கடந்த சில வருடங்களாக பணியாற்றி வருகிறோம். கடந்த ஆகஸ்டு 2019 அன்று வரை மட்டுமே எங்களுக்கு கல்லூரியிலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு எங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் கொரோனா காலத்தில் எங்களின் குடும்பங்களில் ஏற்படும் பண பிரச்சினைகளை எங்களால் சமாளிக்க இயலவில்லை. அன்றாட தேவைகளுக்கே வழியில்லாமல் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி குடும்ப செலவுகளை பார்த்து வருகின்றோம்.
தற்போது கடனையும் செலுத்த முடியாமல் தவித்து வருகிறோம். கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை தொலைபேசியிலும், நேரில் சென்று முறையிட்டும் எந்த பயனும் இல்லை. எனவே எங்களுக்கு வர வேண்டிய ஊதியத்தொகையை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த மனுவில் கூறியிருந்தனர்.