மாவட்ட செய்திகள்

இனி குப்பைகளை தரம் பிரித்து தான் கொடுக்க வேண்டும் மாநகராட்சி அறிவிப்பு

இனி குப்பைகளை தரம் பிரித்து தான் கொடுக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மதுரை

இனி குப்பைகளை தரம் பிரித்து தான் கொடுக்க வேண்டும் என்று மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இது குறித்து ஆணையாளர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுப் பகுதிகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை விதியின்படி அனைத்து குடியிருப்புகள், மத்திய மாநில அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், வழிபாட்டுதலங்கள், விளையாட்டு மைதானங்கள், அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் சந்தை சார்ந்த சங்கங்கள் ஆகிய அனைத்தும் குப்பைகள் சேகரிக்க வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து கொடுக்க வேண்டும்.

மேலும் 5,000 சதுரஅடிக்கு மேல் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 கிலோவிற்கு அதிகமாக குப்பைகளை உருவாக்கும் அனைத்து நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேகரிக்கப்படும் மக்காத குப்பைகளை மாநகராட்சி அல்லது மாநகராட்சியால் மறுசுழற்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

மக்கும் குப்பைகளை இயற்கை உரம் அல்லது இயற்கை வாயு தயாரிக்க அந்தந்த நிறுவனங்களே தமது சொந்த பொறுப்பு மற்றும் செலவில் அவர்களது வளாகத்திலேயே தேவையான கட்டமைப்பு வசதிகளை அடுத்த மாதம் 31ந் தேதி ஏற்படுத்த வேண்டும். அதற்கான திட்ட வடிவத்தை மாநகராட்சி பொறியியல் பிரிவில் சமர்ப்பித்து உரிய ஒப்புதல் பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.