கோடை காலத்தில் பாடாய்ப்படுத்தும் வியர்க்குரு 
ஆரோக்யம்

வியர்க்குருவை விரட்டும் எளிய வழிமுறைகள்

பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்துவது நல்லது.

வெயில் காலம் வந்தாலே சிலருக்கு வியர்க்குரு அள்ளிக் கொட்டினாற்போல் உடம்பெல்லாம் வந்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வியர்க்குரு விட்டுவைப்பதில்லை.

எனவே, கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவேண்டியது அவசியம். இதற்கு அந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்களை தாராளமாக உண்ணவேண்டும். வியர்க்குருவுக்கும் இது நல்ல மருந்தாக அமையும்.

தீர்வுகள்

1). இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் , கிர்ணிப்பழம் போன்றவை வியர்க்குருவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவும்.

2). பனை நுங்கு மிகமிகச் சிறந்த மருந்து. அதிக அளவில் இதை சாப்பிடலாம்.

3). வேப்பிலை, சந்தனம் , மஞ்சள் இந்த மூன்றுமே வியர்க்குருவுக்கு மிகச் சிறந்த கிருமி நாசினி மருந்து. இந்த மூன்றையும் சம அளவில் எடுத்து, மையாக அரைத்து, வியர்க்குரு இருக்கும் இடங்கள் முழுவதிலும் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேய்த்து, சுமார் 1 மணி நேரம் ஊற விட்டு, பின் குளிக்கவேண்டும்.

4). வெறும் சந்தனத்தை உடலெங்கும் தேய்த்துக் கொள்ளலாம்.

5). வெயில் காலத்தில் , வழக்கமாக குடிப்பதைவிட, சற்று அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

6). முடிந்தவரை வெயில் கடுமையாக இருக்கும் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

7). பருத்தியால் செய்யப்பட்ட ஆடைகளை வெயில் காலத்தில் உடுத்துவது நல்லது.

8). கற்றாழைச் சாறு தடவினால் நல்ல பலன் கிடைக்கும்

9). ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டி வைத்துக் கொண்டு, வியர்க்குரு இருக்கும் இடங்களின் மேல் தடவினால் , எரிச்சல், அரிப்பு குறைந்துவிடும்.

10). கூடுமானவரை காற்றோட்டமான இடத்தில் இருக்க வேண்டும்.

-டாக்டர் எஸ். அமுதகுமார்.