தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டீ, காபி பிரியர்கள் கூட, இப்போது இளநீர், ஜூஸ், தர்பூசணி, வெள்ளரிக்காய் பக்கம் திரும்பிவிட்டனர். இதில், நீர்ச்சத்து மிக்க வெள்ளரிக்காயை பற்றி அறிந்துகொள்வோம்.
கோடையில் நீர்ச்சத்து நிரம்பிய உணவு பொருட்களை உட்கொள்ள விரும்புபவர்களுக்கு வெள்ளரிக்காய் சிறந்த தேர்வாக அமையும். வெள்ளரிக்காயில் பல வகைகள் உள்ளன. இருப்பினும் பாம்பு போன்று நீளமாக காட்சியளிக்கும் ‘ஸ்னேக் குக்கும்பர்’ எனப்படும் சுருள் வெள்ளரிக்காய்தான் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.
சாதாரண வெள்ளரிக்காய், சுருள் வெள்ளரிக்காய் இந்த இரண்டில் எது கோடையில் உங்களை குளிர்ச்சியாக உணர வைக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மற்ற வெள்ளரிக்காயைப் போலவே பாம்பு வெள்ளரியும் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இதுவும் தாகத்தை கட்டுப்படுத்தும். புத்துணர்ச்சியுடன் செயல்பட தூண்டும். பாம்பு வெள்ளரியில் இலையில் நரம்பியல் பண்புகள் உள்ளன. அவை நீரிழிவு நோயால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மூளையைப் பாதுகாக்கும் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாம்பு வெள்ளரியில் 15 சதவீதம் புரதமும், 22 சதவீதம் எண்ணெயும் உள்ளடங்கி உள்ளது.
இருப்பினும் பாம்பு வெள்ளரிக்காயை விட சாதாரண வெள்ளரிக்காயில்தான் அதிக நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. வெப்பமான காலநிலையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பதற்கும் உதவுகிறது. அதேவேளையில் இரண்டிலும் வைட்டமின்கள் ஏ, சி, பி6, ஈ, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை நிரம்பி இருக்கின்றன.
பாம்பு வெள்ளரிக்காய் சந்தையில் குவிந்து கொண்டிருந்தாலும் அதனை குறைவாகவே உட்கொள்கிறார்கள். உடலில் கொழுப்பின் அளவை குறைக்க விரும்புபவர்கள் பாம்பு வெள்ளரிக்காயை தாராளமாக உட்கொள்ளலாம். சாதாரண வெள்ளரிக்காய் 24 அங்குலம் வரைதான் நீளம் கொண்டிருக்கும். ஆனால் பாம்பு வெள்ளரி 15 முதல் 36 அங்குலம் வரை நீண்டிருக்கும். சாதாரண வெள்ளரியை வளர்ப்பதற்கு குறைவான நீர் போதுமானாது. ஆனால் பாம்பு வெள்ளரி குளிர்ச்சியான நீர் நிலை கொண்ட பகுதியில்தான் நன்றாக வளரும்.
சாதாரண வெள்ளரியின் தோல் பகுதி சற்று கசப்பு தன்மை கொண்டிருக்கும். அதனால் தோலை நீக்கி விட்டு சாப்பிட வேண்டியிருக்கும். ஆனால், பாம்பு வெள்ளரியை அப்படியே சாப்பிட்டு விடலாம். பாம்பு வெள்ளரி நன்கு வளர்ந்து பழமாக மாறுவதற்கு 50-60 டிகிரி வெப்ப நிலை தேவைப்படுகிறது. இந்தியா வெப்பமண்டல நாடு என்பதால், இந்த வகை வெள்ளரியை உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக விளங்குகிறது.