மும்பை,
மராட்டியத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு காரணமாக திடீர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அணி மற்றும் பா.ஜனதா கூட்டணி ஆட்சி உருவானது.
இந்த பரபரப்பான அரசியலுக்கு மத்தியில் சிவசேனாவில் ஏற்பட்ட பிளவு, அந்த கட்சியின் இரு அணி எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம், சபாநாயகர், கவர்னரின் அதிகார வரம்பு போன்றவை குறித்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை அடுத்த மாதம் (பிப்ரவரி) 14-ந் தேதி முதல் தொடங்க இருப்பதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று அறிவித்தது.
இதற்கிடையே சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில் சிபல், "வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.