மாவட்ட செய்திகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே பலத்த மழை: வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

புஞ்சைபுளியம்பட்டி அருகே பெய்த பலத்த மழையால் 50 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அந்த பகுதியில் உள்ள 5 குட்டைகள் நிரம்பின.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதன்காரணமாக மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்படவில்லை. குடிநீர் தேவைக்காக மட்டும் பவானி ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக காட்சி அளிக்கின்றன. ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லை. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் கூட கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது மழை பெய்யாதா? நம்முடைய கவலைகள் தீராதா? என ஒவ்வொரு நாளும் வானத்தை பார்க்காத விவசாயிகளே இல்லை எனலாம்.

இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளான விண்ணப்பள்ளி, பாச்சாமல்லனூர், பனங்காட்டுப்பாளையம், கைக்காலன்குட்டை, பனையம்பள்ளி, சொலவனூர், உயிலம்பாளையம், காவிலிபாளையம், தேவம்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 6.30 மணி அளவில் திடீரென குளிர்ந்த காற்று வீசியது. வானில் கருமேகங்கள் திரண்டு வந்தன. காலை 7 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை கன மழையாக மாறி 10 மணி வரை தொடர்ந்து 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதனால் புஞ்சைபுளியம்பட்டியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. கிராமப்பகுதிகளில் உள்ள பல ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கைக்காலன்குட்டை மற்றும் பனையம்பள்ளி பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்தனர். பின்னர் வீடுகளில் புகுந்த தண்ணீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த புங்கம்பள்ளி அருகே சத்தியமங்கலம்கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓடைப்பாலம் உள்ளது. இந்த ஓடைப்பாலம் 15 அடி ஆழம் கொண்டது. நேற்று பெய்த மழையால் இந்த ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பாலத்துக்கு மேலே 3 அடி உயரத்துக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சத்தியமங்கலம்கோவை தேசிய நெடுஞ்சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள பல்வேறு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆடு, மாடு, பன்றிகள் உள்பட ஏராளமான கால்நடைகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள பனங்காட்டுபாளையம், பாச்சாமல்லனூர், கைக்காலன்குட்டை ஆகிய பகுதிகளில் உள்ள 5 குட்டைகள் நிரம்பி மறுகால் பாய்ந்தன. இதுபற்றி அறிந்ததும் கோபி சப்கலெக்டர் (பொறுப்பு) குமார், சத்தியமங்கலம் தாசில்தார் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று அங்குள்ள பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மழையால் வீடுகள் எதுவும் பாதிப்பு அடைந்து உள்ளதா? கால்நடைகள் எதுவும் அடித்து செல்லபட்டதா? என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

சத்தியமங்கலம், செண்பகப்பதூர், தங்க நகர், வேடசின்னனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் 8.30 மணிக்கு திடீரென இடியுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. பகல் 11 மணி வரை தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சத்தியமங்கலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் நகராட்சி பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலையில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவமாணவிகள் மற்றும் வேலைக்கு சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு வீதிகளில் குழிகள் தோண்டப்பட்டு மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று மழை பெய்ததால் சத்தியமங்கலத்தில் உள்ள பல்வேறு வீதி மற்றும் சந்துகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பாதாள சாக்கடை குழிகளில் உள்ள மண் அரிக்கப்பட்டுவிட்டன.

அங்குள்ள முகமதியர் வீதி வழியாக சென்ற சரக்கு ஆட்டோவின் சக்கரங்கள் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழியில் சிக்கி கொண்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு வந்து சரக்கு ஆட்டோவை மீட்டு தூக்கி நிறுத்தினர்.

இந்த மழை காரணமாக சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் ஒண்ணே கவுடர் பள்ளம் நேற்று நிரம்பி வழிந்தது. செண்பகப்புதூர், தங்க நகர், வேடசின்னனூர் ஆகிய கிராமங்களில் உள்ள சிறு, சிறு ஓடைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. செண்பகப்புதூர் கரியகாளியம்மன் கோவில் அருகே உள்ள தடுப்பணை நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இதேபோல் பவானிசாகர் பகுதியிலும் நேற்று காலை பலத்த மழை பெய்தது.

அம்மாபேட்டை, சிங்கம்பேட்டை, சித்தார், நெரிஞ்சிப்பேட்டை, குருவரெட்டியூர், சென்னம்பட்டி, பூதப்பாடி, ஒலகடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.45 மணி அளவில் இடி, மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை 2.30 மணி வரை நீடித்தது. இதைத்தொடர்ந்து சாரல் மழை பெய்தது. பின்னர் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இது 4.30 மணி வரை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் அங்குள்ள ஓடைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அம்மாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நின்றது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக 162 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி மற்றும் அம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.